ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக அது குறித்து புதுடில்லியில் நடக்கவுள்ள மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு பிரதிநிதிகளை அழைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. பல்வேறு துறை
புதுடில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர்கள் புபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, பொதுச்செயலர்கள் தருண் சுக், சுனில் பன்சல் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் ஏற்படுத்தி உள்ள வளர்ச்சி, அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை பயனாளிகளை எந்தளவுக்கு சென்றடைந்தன என்ற புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.உ.பி.,யின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை, பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இதை மக்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சியாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.திறப்பு விழாவுக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், திறப்பு விழாவுக்கு பின், லோக்சபா தேர்தல் வரையிலான கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து ஆராய, புதுடில்லியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரபலங்கள்
இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை கூறுவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், இரண்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இவர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களாகவோ, மிக முக்கிய பிரபலங்களாகவோ, கட்சி சாராத சமூக அக்கறை கொண்டவர்களாகவோ இருப்பர்.உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில், இன்னும் சில நாட்களில் அந்தக் கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஷ்டம் போல சேர முடியாது!
தேர்தல் பணிகள் குறித்து பல வகை குழுக்கள் அமைப்பது இதுவரையில் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக, மாற்றுக் கட்சிகளில் இருந்து பா.ஜ.,வில் சேர விரும்புகிறவர்களுக்காகவும், அவர்கள் ஒரு வேளை தேர்தலில் போட்டியிட, 'சீட்3 கேட்டால், அது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக ஒரு புதிய குழுவை பா.ஜ., அமைத்து உள்ளது. கட்சியில் சேர விரும்புகிறவர்களின் பின்னணி, நோக்கம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையின் முடிவின் அடிப்படையில் அவர்கள் பா.ஜ., வில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையில், அவர்கள் பா.ஜ.,வுக்கு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்படும் இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது.- நமது டில்லி நிருபர் -