காங்கிரஸ் கட்சிக்குள், ராகுலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் குரல்கள் அதிகரித்துள்ளன. அதே சமயம், அவரது சகோதரி பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் தலைமை மீது, 'இண்டி' கூட்டணியில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலரே அதிருப்தியில் இருப்பதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக பீஹார் சட்டசபை தேர்தலின்போது, கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிருப்தி
ஆனால், ராகுலோ, கண்டும் காணாத வகையில் நடந்து கொண்டார். ஒரு மாதமாக தொகுதி பக்கமே வரவில்லை என போஸ்டர் அடித்து தேடும் அளவுக்கு, ராகுலின் செயல்பாடு இருந்தது. அதற்கேற்றபடி பீஹார் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், ராகுல் மீது கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.மேலும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து எழுப்பிய புகார்களும், முந் தைய தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் கமிஷனை விமர்சித்து ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என தெரிந்து பல் இளித்தன. கடைசியாக, மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட ராகுலின் தேர்தல் வியூகம் எடுபடவில்லை. இதனால், மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸை கழற்றி விட, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா முடிவு செய்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஒடிசா காங்., தலைவர் முகமது மொஹிம், 'கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகி யோரை நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக பிரியங்காவை தலைமை பதவியில் அமர்த்த வேண்டும்' என, கருத்து தெரிவித்திருந்தது காங்கிரஸ் கட்சிக்குள் புயலை ஏற்படுத்தியது. இதனால், கட்சியில் இருந்து முகமது மொஹிம் உடனடியாக நீக்கப்பட்டார்.சண்டை
'வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், பவுத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களை காக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமீபத்தில் பிரியங்கா பேசியிருந்தார். உத்தர பிரதேசத்தில் ஷஹாரன்பூர் காங்., - எம்.பி., இம்ரான் மசூத், ''பிரியங்கா, துணிச்சலுடன் கருத்து தெரிவித்துள்ளார். அவரை இந்நாட்டின் பிரதமராக்க வேண்டும். நிச்சயம் அவர் பாட்டி இந்திராவை போல் செயல்படுவார்,'' என, புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதற்கு முன்பாக, பார்லி., குளிர் கால கூட்டத்தொடரிலும், பிரியங்காவின் பேச்சுக்கு, சில காங்., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக ஆதரவு குரல் எழுப்பி இருந்தனர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராகுல், குளிர் கால கூட்டத் தொடர் முடிவதற்கு முன்பாகவே, வீட்டில் சண்டையிட்டு விட்டு, ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் தகவல் பரவியது.வங்கதேச பிரச்னை குறித்து, பிரியங்கா பேசிய கருத்துக்கு சொந்த கட்சிக்குள் ஆதரவு பெருகி இருந்த நிலையில், ஜெர்மனிக்கு சென்ற ராகுல், அங்கு மத்திய அரசுக்கு எதிராக பேசிய பேச்சுக்கு பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை.'இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகம் உலக சொத்து, அதன் மீதும், அரசியல் சாசன அமைப்பின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் உலக ஜனநாயக முறைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்' என, விமர்சித்தது பிசுபிசுத்து போனது. இதற்கு பா.ஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா அளித்த பதிலடியும் ஒரு காரணம்.இது குறித்து அவர் கூறியதாவது: ராகுல் மிகுந்த விரக்தியில் இருக்கிறார். ஏனெனில், சொந்த கட்சியினரே அவரை ஒதுக்க துவங்கி விட்டனர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் சசி தரூர், இம்ரான் மசூத் உள்ளிட்டோர் ராகுலை நம்ப தயாராக இல்லை. அவரது இடத்திற்கு பிரியங்காவை கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றனர். தவிர அவரது கணவர் ராபர்ட் வத்ராவும் அதை சரி என்பது போல தலை அசைத்து இருக்கிறார். குடும்ப உறுப்பினர்களும் அவரை நம்ப தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
'வெளிநாடு செல்லும் நேரமா இது?'
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவடையும் முன் ராகுல் ஜெர்மனி சென்றதை காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தப்பட்டு வருகிறது. இதை பொருட்படுத்தாமல் ராகுல் வெளிநாட்டிற்கு செல்கிறார். பார்லி.,யில் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். எனவே, இக் கால கட்டங்களில் எந்த பயணத்தையும் இனி திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். இதுபற்றி காங்., மூத்த தலைவர்களும் அவருக்கு அறிவுறுத்த வேண்டும்,” என்றார்.- நமது டில்லி நிருபர் -