வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு தியாகத்தையும் செய்ய வேண்டாம்.ஆணவம் அகந்தையை விட்டு ஒன்றிணைந்தால் போதும்.
சென்னை: 'வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, எந்த தியாகத்திற்கும் தயார்' என, ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம், தமிழகம் முழுதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் துாவி, பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயகுமார், வளர்மதி, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின், பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வினர் எடுத்த உறுதிமொழி: * பொய்யான வாக்குறுதிகள் பல தந்து, தமிழக மக்களை ஏமாற்றி, குடும்ப ஆட்சி கோலோச்சும் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்திய தி.மு.க., ஆட்சியின் கொட்டத்தை அடக்குவோம் * 'நீட்' தேர்வு ரத்து, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, மாதந்தோறும் மின் கணக்கீடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம் என, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வின் பொய் முகத்தை தோலுரித்துக் காட்டுவோம் * குடிநீர், கழிவுநீர் கட்டணம், சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வு என, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திர மாடல், ஏமாற்று மாடல் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் * அ.தி.மு.க.,வை காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம். 2026ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் * எம்.ஜி.ஆர்., வகுத்த பாதையில், ஜெயலலிதாவின் கொள்கை வழியில் நின்று அரும் பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்திடுவோம். தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் ஆன்மாவை மகிழ்விப்போம். இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள், நினைவு நாட்களில், அ.தி.மு.க.,வினர் கிளை கமிட்டி அளவில், அவர்களின் படங்களை வைத்து, கொடி, தோரணங்கள் கட்டி, அன்னதானம் வழங்குதல், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிப் பொருட்கள் வழங்குதல் என நிகழ்ச்சிகளை நடத்துவர். ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையிலும், ஜெயலலிதா நினைவு நாளான நேற்று, சென்னையில் அதிகமான நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. நினைவஞ்சலி போஸ்டர்களைகூட குறைவாகவே பார்க்க முடிந்தது. ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது, அக்கட்சி தொண்டர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
ஒரு தியாகத்தையும் செய்ய வேண்டாம்.ஆணவம் அகந்தையை விட்டு ஒன்றிணைந்தால் போதும்.