உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ராமதாசின் அரசியல் வாரிசு சுகந்தன்; மகள் வழி பேரனுக்கு கட்சியில் பதவி

 ராமதாசின் அரசியல் வாரிசு சுகந்தன்; மகள் வழி பேரனுக்கு கட்சியில் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகன் டாக்டர் சுகந்தனுக்கு, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கி, அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். பா.ம.க.,வில் நடந்த உச்சகட்ட மோதலுக்கு பின், அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய நிறுவனர் ராமதாஸ், அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவியை அன்புமணியின் சகோதரி ஸ்ரீ காந்திக்கு கொடுத்தார். மேலும், ஸ்ரீ காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு, அன்புமணி ஏற்கனவே வகித்து வந்த மாநில இளைஞர் சங்க பதவியை, கட்சி செயற்குழு கூட்டத்தின் வாயிலாக அளித்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நியமனம் கட்சிக்குள், ராமதாசிற்கும் - அன்புமணிக்கும் மோதல் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்டது. கட்சிக்குள் பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து வந்ததால், முகுந்தன் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின், அந்த பதவி ஜி.கே.மணியன் மகன் தமிழக்குமரனுக்கு, ராமதாஸ் வழங்கினார். இந்நிலையில், தன்னுடைய மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகனான டாக்டர் சுகந்தனை கட்சியில் முக்கியத்துவப்படுத்தும் நோக்கோடு, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, சுகந்தனை, தன்னுடைய அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தி உள்ளதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். இதற்கிடையில், வரும் டிச., 12ம் தேதி தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுகந்தனை ராமதாஸ் நியமித்துள்ளார்.

தேர்தலில் தமிழ்க்குமரன் போட்டி

பா.ம.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடந்தது. அதில் ஜி.கே.மணி, தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், பேட்டியளித்த ராமதாஸ், ''வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்க்குமரன் போட்டியிடுவார். மிகப்பெரிய வெற்றி பெறுவார். வரும் டிசம்பர் 30ல் நடக்கும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்,'' என்றார். வரும் சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் தமிழ்க்குமரனை நிறுத்த, ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2010ல் நடந்த பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், முதல் முறையாக தமிழ்க்குமரன் போட்டியிட்டு, அ.தி.மு.க.,வை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை