2,000 கேட்டால் 75 மட்டும் வழங்குவதா: தமிழக பா.ஜ. நிர்வாகிகள் கொதிப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, 'கேலோ இந்தியா' போட்டிகளை துவக்கி வைக்க, இன்று(ஜன.,19) சென்னை வருகிறார். மாலை, சென்னை நேரு அரங்கில் துவக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடக்கிறது. இதன் ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்துள்ளது.மொத்தம், 40,000 பார்வையாளர்கள் பங்கேற்கும் திறன் உடையது நேரு அரங்கம். அங்கு, சீரமைப்பு பணிகள் நடப்பதால், கேலோ இந்தியா துவக்க விழாவில், 11,000 பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க, அரசு முடிவு செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w7fe383g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரவேற்பு
பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச்சியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று, சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம், 2,000 பேருக்கு அனுமதி சீட்டு பா.ஜ., தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் வி.ஐ.பி., பிரிவில், 25; சாதாரண பிரிவில், 50 அனுமதி சீட்டு மட்டும் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கேலோ இந்தியா துவக்க விழா நிகழ்ச்சிகளை தமிழக அரசு தான் முன்னின்று நடத்துகிறது. நிகழ்ச்சியின் கதாநாயகனாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவர், அனைவருக்கும் சொந்தமானவர். அடிப்படையில் அவர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர். அதனால், அவரது நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்பது பா.ஜ.,வினரின் கடமை. எனவே, 2,000 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதற்கு ஏற்ப அனுமதி சீட்டு கேட்டால், பா.ஜ.,வுக்கு, ஐந்து வி.ஐ.பி.,க்கள் பாஸ் தரப்படும் என்று கூறினர். தற்போது, வி.ஐ.பி., பிரிவில், 25; சாதாரண பிரிவில், 50 தருவதாக கூறியுள்ளனர்.ஸ்டாலின் பேசும் போது ஆதரவாக கோஷங்களை எழுப்ப மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என்ற போர்வையில் தங்கள் கட்சியினரை அதிகளவில் பங்கேற்க, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.பதிலடி
சமீபத்தில் திருச்சியில் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா நடந்தது. அந்நிகழ்ச்சியில் பா.ஜ.,வினர் பெரும் திரளாகக் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'மோடி... மோடி...' என பா.ஜ.,வினர் கோஷம் எழுப்பினர். கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் பா.ஜ.,வினரை அதிக அளவில் பங்கேற்க செய்யாமல் செய்து, தி.மு.க.,வினரை விட்டு, பிரதமர் மோடி பேசும்போது, திருச்சி நிகழ்ச்சிக்கு பதிலடியாக கோஷம் எழுப்ப திட்டமிட்டு, அனுமதி சீட்டுக்களை பா.ஜ.,விற்கு குறைத்து கொடுக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விளையாட்டு போட்டி துவக்க விழாவின் ஏற்பாடுகளை, தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகையின் கணவரான இயக்குனரின் நிறுவனமே செய்துள்ளது.தமிழக பா.ஜ., சார்பில், சுவாமி சிவானந்த சாலையில் காரில் செல்லும் பிரதமர் மோடிக்கு, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி வாயிலாக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.தி.மு.க., சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் அரங்கம் வரை முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.