உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டு எண்ணும் பணியில் 1,002 ஊழியர்கள்

ஓட்டு எண்ணும் பணியில் 1,002 ஊழியர்கள்

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 4ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறியதாவது:புதுச்சேரி பிராந்தியத்தில் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரி, காரைக்காலில் அண்ணா அரசு கலை கல்லுாரி, மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளி, ஏனாமில் எஸ்.ஆர்.கே., அரசு கல்லுாரியில் 12 துணை தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் மேற்பார்வையில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு பொது பார்வையாளர், கூடுதலாக 12 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மாநிலத்தின் நான்கு பிராந்திய ஓட்டு எண்ணிக்கை மையத்திலும் ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 1,002 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.இவர்கள் எந்த இடத்தில் பணிபுரிவார்கள் என்பதை 4ம் தேதி காலை தான் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டு எண்ணிக்கை அதிகாரிகளுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். புதுச்சேரியில் 93 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 6:30 மணிக்கு பாதுகாப்பு அறையில் இருந்து முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்காக புதுச்சேரியில் 4 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. முகவர்களின் தகவல் பெறப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்துக்கு சென்று வர அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையின்றி முகர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகவர்கள் பேனா, காகிதம், அடையாள அட்டை தவிர வேறு பொருட்கள் எடுத்துவர அனுமதியில்லை.ஓட்டு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் மொபைல் போன் எடுத்துவர அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 100 மீட்டர் துாரத்திற்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். ஓட்டு எண்ணப்படும் 4ம் தேதி அனைத்து மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கைக்கு 8 அறைகள் அமைக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு சுற்று ஓட்டு எண்ண 3 மணி நேரம் ஆக வாய்ப்புள்ளது. இரவு 7:00 மணியளவில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்.வெற்றி ஊர்வலம் செல்லும் சாலைகள் கண்காணிக்கப்பட உள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட, வட்டார அளவில் செயலாக்க நடுவர், போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா கூறுகையில், ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். ஒட்டுமொத்தமாக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அடையாள அட்டை உள்ளவர்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவர். மொபைல் போன், லேப்டாப் போன்ற கருவிகள் அனுமதிக்கப்படாது. வெற்றி ஊர்வலம் பொதுமக்கள், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடத்த அனுமதியளிப்போம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ