| ADDED : ஜூன் 09, 2024 03:48 AM
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு அரசு பள்ளி அருகே கனமழை காரணமாக மரம் விழுந்து, மூன்று மின்கம்பங்கள் உடைந்ததால் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதியில் மரக்கிளைகள் உடைந்து விழுந்து சேதமடைந்தன.இரவு 11:00 மணியளவில் கூனிச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே இருந்த பழமையான சவுண்டல் மரம் ஒன்று சூறைக் காற்றில் வேருடன் சாய்ந்து அருகில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது.இதனால், அருகில் இருந்த மூன்று மின்கம்பங்கள் முற்றிலும் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, திருக்கனுார் மின்துறை ஊழியர்கள் கூனிச்சம்பட்டில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் நேற்று காலை வரை ஈடுபட்டனர். பின், காலை 11:00 மணியளவில் மின்சாரம் வழங்கப்பட்டது.