உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா?

அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா?

புதுச்சேரி : காலாப்பட்டு செவாலிய செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் இறந்து கிடந்த வாலிபர் முகத்தில் காயம் உள்ளதால், கொலை செய்யப்பட்டரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பிள்ளைச்சாவடி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதமன், 54; காலாப்பட்டு செவாலிய செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெக்கார்டு கிளார்க்காக வேலை செய்துவருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தந்தை நினைவு நாளை முன்னிட்டு புத்துப்பட்டு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தான் பணியாற்றும் பள்ளியின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பள்ளியில் பணியாற்றும் எம்.டி.எஸ்., ஊழியர்களான வினோத்குமார், நாராயணசாமியை பள்ளிக்கு வரவழைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வேறு எந்த அறைகளும் உடைக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் கை கழுவும் தண்ணீர் குழாய் அருகே முகம் மற்றும் மூக்கு பகுதியில் காயத்துடன் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தவர் உடலை மீட்டு கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கவுதமன் அளித்த புகாரின் பேரில், பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தவர் முகத்தில் காயம் இருப்பதால், மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை