புதுச்சேரி : 'போட்டி தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ள 'தினமலர் - பட்டம்' இதழ் மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்' என, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில், 'தினமலர் - பட்டம்' இதழ்களை மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, வைசியாள் வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்தது. விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்தி ராஜவேலு வரவேற்றார். விழாவில் சபாநாயகர் செல்வம், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை வழங்கினர்.பட்டம் இதழை வழங்கி, அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:கல்வித் துறையில் மாணவ மாணவிகளுக்காக நிறைய திட்டங்களை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவரும் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.'தினமலர் - பட்டம்' இதழ் முழுக்க முழுக்க மாணவ மாணவிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் பொது அறிவை வளர்க்கும் உன்னத நோக்கத்துடன் பட்டம் இதழை கொண்டு வந்துள்ள தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.தற்போதைய காலக்கட்டத்தில் படிப்புடன் பொது அறிவும் அவசியமாக தேவைப்படுகிறது. போட்டிகள் நிறைந்த உலகத்தில் வசிக்கிறோம். மாணவ மாணவிகள் முன்னுக்கு வர வேண்டும் என்றால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியதும், பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.இதற்கு, 'தினமலர் - பட்டம்' இதழ் மாணவ மாணவிகளாகிய உங்களுக்கு உதவும். உலகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மட்டுமல்லாமல், அறிவியல், கணிதம், மொழி, இலக்கியம், வரலாறு, விளையாட்டு உள்ளிட்டவைகளும் பட்டம் இதழில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல், வெள்ளி வரை வெளி வருகின்றன 'தினமலர் - பட்டம்' இதழ் பொது அறிவு களஞ்சியமாக திகழ்கிறது.பட்டத்தை படிப்பதால், போட்டி தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ள உதவியாக இருக்கும். நீட், கியூட் போன்றவற்றையும் எதிர்கொள்ளலாம்.வரும் ஆண்டில் இருந்து மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, ஷூ போன்றவற்றை இலவசமாக வழங்க உள்ளோம். ஏற்கனவே, லேப் டாப் வழங்கி வருகிறோம். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.952.51 கோடியை முதல்வர் ஒதுக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.அரசின் திட்டங்களை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, பொது அறிவையும் வளர்த்து கொண்டு, சமுதாயத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.விழாவில் ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.