| ADDED : ஜூலை 01, 2024 06:28 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யும் திட்டம் இலவசமாக கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.புதுச்சேரி மாநிலம், பால் உற்பத்தியில் தன்னிறைவை பெறவும், கால்நடை விவசாயிகளின் வருமானம் பெருகிடவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, செயற்கை கருவூட்டல் முறையில் பெண் கன்றுகளை ஈனும் திட்டம், இந்தாண்டு முதல் நடை முறைப்படுத்தப்பட உள்ளது.இதில் தினசரி 25 லிட்டர் பால் கொடுக்கும் உயர் ரக மாடுகளின் விந்தணு மற்றும் கருமுட்டையை கொண்டு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டு, 6 நாட்கள் ஆன கருமுட்டைகளைக் கொண்டு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படும்.இதன் மூலம் பெண் கன்றுகள் ஈனும் விகிதம் அதிகரிப்பதுடன் அவ்வாறு பெறப்படும் கன்றுகள் அதிகப்படியான பால் வழங்கும் கறவை மாடுகளாக இருக்கும். இதனால் பெண் கன்றுகள் அதிக அளவில் பெறப்படுவதுடன், தினசரி பெறப்படும் பாலின் அளவு அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயரும்.மத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் மெஷின் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், செயற்கை கருவூட்டல் ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் மத்திய அரசின் பங்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மீதமுள்ள 16 ஆயிரம், கால்நடை விவசாயிகள் செலுத்த வேண்டும். எனினும் கால்நடை விவசாயிகளின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு, இந்த 16 ஆயிரத்தை மாநில அரசின் மானியமாக வழங்குகிறது. இதனால் இத்திட்டம் கால்நடை விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது.இத்திட்டத்தினை பற்றிய விவரங்களுக்கும், விண்ணப்பம் பெறுவதற்கும் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம்.