போலீசாரின் முயற்சிக்கு இளைஞர்கள் வரவேற்புமது போதையைவிட மிக மோசமானது கஞ்சா போதை. கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு போதை தலைக்கேறி விடும். கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து வாழ்க்கையை இழக்கின்றனர்.மது போதையை அனுபவித்த இளைஞர்கள், அதை தாண்டிய போதை வேண்டும் என்ற ஆசையில் கஞ்சாவை தேடி செல்கின்றனர். சிலர் நண்பர்களின் பார்ட்டிகளுக்கு செல்லும்போது கஞ்சா புகைத்து அதற்கு அடிமையாகின்றனர். கஞ்சா போதையில் இருந்து புதுச்சேரி இளைஞர்களை மீட்கவும், கஞ்சா விற்பனையை ஒழிக்கவும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். களத்தில் இறங்கிய டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் அனைத்து சீனியர் எஸ்.பி.,கள் மற்றும் எஸ்.பி.,க்களை அழைத்து கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும், கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டி.ஜி.பி., அறிவுறுத்தி உள்ளார்.இதுதொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில், பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, போலீஸ் சார்பில், கேரம் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து, பீச் வாலிபால் போட்டி கடற்கரையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுடன், கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று திரும்பியவர்கள், கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர்களையும் போலீசார் பங்கேற்க செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் தலைமையகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஐ.ஜி., அஜித்குமார்சிங்லா, சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, கலைவாணன், எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.போலீசார் கூறும்போது, 'கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்க விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறோம். கேரம், பீச் வாலிபால் போட்டிகளை நடத்தி உள்ளோம். பைக் பேரணி, வாக்கத்தான் போன்றவை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 பேரில் ஒருவர் திருந்தினால் கூட, இந்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவோம்.எல்லாவற்றுக்கும் மேலாக, போலீசார் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டு போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது' என்றனர்.