புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.அதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பா.ஜ., அமைச்சர்களை மாற்ற வேண்டும். தொகுதிக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை வைத்து வருகின்றனர்.தொடர்ந்து, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். அதை ஏற்காத எம்.எல்.ஏ.,க்கள் அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட காய் நகர்த்தி வருகின்றனர்.இந்நிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை 11:00 மணிக்கு சட்டசபையில் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனை பகல் 12:30 மணிவரை நீடித்தது. .தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், நாங்கள் பா.ஜ., வில் தான் உள்ளோம். எங்களது கோரிக்கைகளை பா.ஜ., தலைமையிடம் விரிவாக விளக்கியுள்ளோம்.தலைமை நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம். எந்த முடிவினை எடுத்தாலும் கட்டுபடுவோம். எங்களை உள்ளங்கையில் வைத்து தாங்க சொல்லவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற கூறியுள்ளோம்' என்றனர்.