தேர்திருவிழாவில் செயின் பறிப்பு மதகடிப்பட்டில் துணிகரம்
திருபுவனை: மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவில், பெண்ணிடம் 2.4 சவரன் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில், நல்லுார் முருகன் கோவில் வீதியை சேர்ந்த மோகன் மகள் சரண்யா, 31; பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பகல் 1:00 மணிக்கு மதகடிப்பட்டு - மடுகரை சாலை மாரியம்மன் கோவில் எதிரே அன்னதானம் வழங்கப்பட்டது. சரண்யா அன்னதானம் வாங்க சென்றார். அங்கு நிலவிய கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 2.4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். அன்னதானம் வாங்கிய பின்பு கழுத்தில் இருந்த செயின் திருடப்பட்டு இருப்பதை அறிந்து கதறி அழுதார். திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.