| ADDED : ஜூன் 22, 2024 04:26 AM
திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டேரிக்குப்பம் கிராமத்தில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது. புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு துப்புரவு பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காட்டேரிக்குப்பம் கிராமத்தில் சிறப்பு துப்புரவு முகாம் நேற்று நடைபெற்றது.இம்முகாமினை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார். பின்னர், அவர் வீடு வீடாக சென்று குப்பை மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உட்புற வீதிகள் மற்றும் கடை வீதிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆணையர் எழில்ராஜன் கூறுகையில் '' சிறப்பு முகாமின் மூலமாக காட்டேரிக்குப்பம் கிராமத்தில் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொது மக்கள் குப்பைகளை வீதியில் வீசாமல், துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை வீதியில் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு துப்புரவு பணி நடைபெற உள்ளது. அன்றயை தினம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு சிறப்பு துப்புரவு பணி செய்வதால், அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை அகற்றும் பணி சிறப்பாக நடைபெறும் என்றார். ''