| ADDED : ஏப் 17, 2024 08:04 AM
பாகூர் : ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் 46; காங்., பிரமுகர். முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள இவர், லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு, ஆதரவாக ஓட்டுகள் சேகரித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு வருமான வரித்துறையினர் 5 பேர் மோகன்தாஸ் வீட்டிற்கு சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த மோகன்தாசின் தாயார் மட்டும் இருந்தார். அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் மோகன்தாசிற்கு தகவல் தெரிவித்தனர்.மோகன்தாஸ் வீட்டிற்கு வந்ததும், வருமான வரித்துறையினர் வீடு முழுவதும் சோதனையிட்டனர். தொடர்ந்து மோகன்தாசிடம், அவரது தொழில்முறை அது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவைகளின் விவரங்களையும் கேட்டறிந்தனர். மாலை 5:00 மணி வரை நடந்த சோதனையில் எதுவும் சிக்காததை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.