| ADDED : ஜூலை 30, 2024 05:05 AM
வில்லியனுார்: வில்லியனுார் பைபாஸ் சாலையில் சிக்னல் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் 'டிராபிக் ஐலேண்ட்' சிமென்ட் கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை எம்.என். குப்பம் முதல் இந்திராகாந்தி சதுக்கம் வரையில் சாலையினை அகலப்படுத்துதல், இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்துதல், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஓர் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல் மற்றும் சென்டர் மீடியன் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்நிலையில் வில்லியனுார் பைபாஸ் சாலை எம்.ஜி.ஆர்., சிலை சதுக்கம், கூடப்பாக்கம் நான்கு ரோடு சதுக்கம் மற்றும் கண்ணகி பள்ளி ரவுண்டானா உள்ளிட்ட மூன்று இடங்களில் வாகனங்கள் தடையில்லாமல் செல்லும் வகையில் 'டிராபிக் ஐலேண்ட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனை அமைப்பதனால் சிக்னல் பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் போக்குவரத்து தடை இல்லாமல் செல்ல வசதியாக இருக்கும். மேலும் சிக்னல் பகுதியில் அமைக்கப்படும் சிமென்ட் கட்டை பகுதியில் பூச்செடிகள் வைத்து அழகு படுத்த உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் கூறியதாவது:ஆரியபாளையம் புதிய மேம்பாலம் துவங்கி வடமங்கலம் பாலம் இறங்கும் பகுதியில் அப்பாசாமி கம்பெனி அருகே விழுப்புரம் - புதுச்சேரி செல்லும் வாகனங்கள் தடை இல்லாமல் செல்லும் வகையில் ஒரு புதிய ரவுண்டானா அமைக்க உள்ளோம். இதனால் புதுச்சேரி-விழுப்புரம், மங்கலம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தனித்தனியாக சாலையில் சுலபமாக செல்லும் வகையில் இந்த ரவுண்டானா இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.