| ADDED : மே 27, 2024 05:15 AM
புதுச்சேரி: இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் புதுச்சேரி மண்டல மையம் மற்றும் அலியன்ஸ் பிரான்சிஸ் நிறுவனமும் இணைந்து, 'பாரதிய கலை உணர்விற்கு நாட்டிய சாஸ்திரம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது.இதில் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அலியன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நல்லாம் வரவேற்றார். நிறுவன இயக்குநர் லாரன்ஸ் ஜோலிகோஸ் வாழ்த்துரை வழங்கினார். கலைஞர் கோபால் சொற்பொழிவாற்றினார்.பத்மா சுப்ரமணியன் பேசுகையில், கலை என்பது இந்தியாவின் உயிர் நாடி என்பதையும், அதை அனுபவிப்பதற்கு கலை ரசனை எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் அழகியலின் விதியையும் பல்வேறு மேற்கோள்களுடன் கூறினார். மேலும் இசை, நாட்டியம், தொல்பொருள் ஆய்வு, கட்டடம், ஓவியம், சிற்பம், வாஸ்து என அனைத்து கலையையும் மேற்கோள் காட்டி எல்லா கலைகளிலும் உள்ள அழகியலை புராண காவியங்களுடன் ஒப்பிட்டு பேசினார். நிகழ்ச்சியில், நாட்டிய கலைஞர் மெகதி நடனம் நடந்தது. கலை விமர்சகர் ஆஷிஷ் கோக்கர் பங்கேற்றார். ஆய்வாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குனர் கோபால் நன்றி கூறினார்.