புதுச்சேரி, : புதுச்சேரியில் முதல்வர் மற்றும் பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சமாதானப்படுத்தினார்.புதுச்சேரியில் என்.ஆர் காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சி நடந்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.இதையடுத்து, என்.ஆர். காங்.,- பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த போதிலும், முதல்வர் ரங்கசாமி மற்றும் பா.ஜ., அமைச்சர்கள் செயல்பாடுகளால் தான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில், டில்லிக்கு சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜியை சந்தித்து முறையிட்டனர். இந்த பிரச்னையை பேசி தீர்க்க பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின்பேரில், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரிக்கு வந்தார்.பா.ஜ., தலைமை அலுவலகத்தில், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது, என். ஆர் காங்., - பா.ஜ., ஆட்சியின் மீது கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதால் தான் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். பல துறைகளில் ஊழல் மலிந்துள்ளது. இப்படியே போனால் வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கொந்தளித்தனர்.தற்போது பா.ஜ., சார்பில் அமைச்சர்களாக உள்ளவர்களை மாற்றிவிட்டு, சுழற்சி முறையில் எங்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்' எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.அவர்களை சமாதானப்படுத்திய பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று 10 நாட்களுக்குள் முடிவை அறிவிப்பதாக உறுதியளித்தார்.