| ADDED : ஆக 14, 2024 06:19 AM
புதுச்சேரி: அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மத்திய அரசு சட்டம் மற்றும் நியாயம் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நியாய ஒலி நிகழ்ச்சி மற்றும் நியாய ஒலிக் குழுவின் துவக்க விழா, சுப்ரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூத்த வக்கீல் ராமசுவாமிக்கு பள்ளியின் பிரெஞ்சு விரிவுரையாளர் எட்வர்டு சார்லஸ், பள்ளி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றார்.வக்கீல் ராமசுவாமி, மாணவிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம், மத்திய மற்றும் மாநில அரசு சட்டம், திருமண வயது, விவாகரத்து, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி பேராசிரியர்கள், பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியை சாந்தி விழா நன்றி கூறினார்.