| ADDED : ஜூலை 29, 2024 05:41 AM
புதுச்சேரி : ஏனாம் கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திரா உள்ளிட்ட சில இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் அருகில் உள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் ஏனாம்கோதாவரி கரையோரம் உள்ளபிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜிவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றவும், புதுச்சேரியில் இருந்து மருத்துவ குழு வரவழைத்து மழைக்கால நோயில் இருந்து பாதுகாக்கவும், படகு மீட்பு குழுக்கள் தயாராக வைப்பது, மணல் மூட்டைகள் அடுக்குதல் குறித்து ஆலோசிக்கப் பட்டது.