| ADDED : ஜூன் 15, 2024 05:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு கசிவு விபத்து இனி எந்த இடத்திலும் நடக்காத வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.புதுச்சேரி, ரெட்டியார் பாளையம், புதுநகர் பகுதியில் கழிவறையில் விஷ வாயு பரவி, மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கவர்னர் ராதாகிருஷ்ணன், நேற்று அப்பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.மேலும் பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கழிவுநீர் குழாய் இணைப்பு தொட்டி கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சிவசங்கரன் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் ராஜு, முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் உடன் இருந்தனர்.விஷவாயு விபத்து குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த கவர்னர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.விஷவாயு குறித்த அச்சத்தை வெளிப்படுத்திய பொதுமக்களிடம் எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி கழிவு நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இது போன்ற ஒன்று விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த வீதியைப் பொருத்தவரையில் தொலைதுாரத்தில் இருந்து வருகின்ற முதன்மை வடிகால் குழாய்க்கு இணையாக இன்னொரு குழாயை பதிக்க முடிவு செய்திருக்கிறோம்.அதை அமைக்கும் வரை முதன்மை குழாயிலேயே இணைப்பு தரப்படும். ஆனால் இணைப்பு தருவதற்கு முன் சேம்பர்கள் கட்டப்படும். வாயு போக்கிகள் ஆங்காங்கே பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இது போன்ற ஒரு விபத்து இனி புதுச்சேரி மாநிலத்தில் எந்த இடத்திலும் நடக்காத வகையில் அணுகுமுறை இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எத்தகைய கழிவுகள் வருகிறது என்பதை தனித்தனியாக ஆய்வு செய்யப்படும். மருத்துவ கழிவுகள் அல்லது தொழிற்சாலை கழிவுகளாக இருந்தால் அது எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்பதை ஆராய்ந்து அந்த நிறுவனம் அல்லது தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.