| ADDED : ஜூலை 15, 2024 11:37 PM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் நச்சுக்கழிவு வாயு கசிவுக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா மனு அளித்துள்ளார். புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் மற்றும் சுற்றுப்புறப்பகுதி மக்களுடன் நேற்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உழவர்கரை புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் நச்சுக்கழிவு வாயு வெளியேறி ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. அதன் பிறகு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்புக்கு கடந்த ஒரு மாதமாக ஆய்வு என்ற பெயரில் மக்களின் வரிபணத்தை வீணாக்கினர்.இதற்கு நிரந்தர தீர்வு காணாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர். கடந்த ஒரு வாரமாக மீண்டும் நச்சு வாயு வெளியேறுவதாக புகார் தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட புதுநகர், செல்லம்பாபு நகர், கம்பன் நகர், ஜெயா நகர், மூகாம்பிகை நகர், கல்யாணசுந்தரம் நகர், சூடாம்பிகை நகர், நண்பர்கள் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொது சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை வல்லுநர் குழு அமைத்து துரிதமாக ஆய்வு நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காணாமல் அலட்சியமாக இருந்தால் தி.மு.க., தொடர் போராட்டம் நடத்தும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.தலைமைப் பொறியாளர் தீனதயாளன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.