| ADDED : மார் 22, 2024 05:57 AM
புதுச்சேரி : இந்திய கம்யூ., விவசாய அணி செயலாளரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுச்சேரி அடுத்த பாகூர் புது நகரை சேர்ந்தவர் விஜயபாலன்,50; இந்திய கம்யூ., விவசாய அணி செயலாளர். இவர், கடந்த 2018ம் ஆண்டு ஆக., 24ம் தேதி கன்னியக்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்தார். அங்கு வந்த, பாகூர் சாந்தி நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஸ்ரீதர்,34; தனது மனைவி பிரிந்து செல்வதற்கு நீ தான் காரணம் எனக் கூறி, விஜயபாலனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த விஜயபாலன் தீவிர சிகிச்சைக்கு பின் 2018 அக்., 12ம் தேதி வீடு திரும்பினார்.இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீதரை கைது செய்த பாகூர் போலீசார், அவர் மீது புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜூ ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஸ்ரீதருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.