| ADDED : ஜூன் 11, 2024 05:44 AM
புதுச்சேரி: பொது இடங்களில் பேனர் வைக்ககூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உட்கோட்ட நடுவர் (வடக்கு) அர்ஜூன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் பொது இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதில்லை, ஆனால், நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டவுடன் பொது இடங்களில் மீண்டும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கின்றனர். மும்பையில் விளம்பர பேனர் இடிந்து விழுந்து 16 பேர் இறந்தனர். இதுபோன்று சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கும் பேனர்கள் இடிந்து விழுந்து இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநகரங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரியில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதன்படி, புதுச்சேரியில் பேனர் வைப்பதை தடுக்கும் சட்டத்தின்படி, அரசு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர்கள் வைப்பது குற்றமாகும். இதற்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தை இந்தச் சட்டத்தை அமல்படுத்தி பேனர்கள் மற்றும் விளம்பரங்களை தடுக்குமாறு பலமுறை உத்தரவிட்டுள்ளது.எனவே பொது இடங்களில் பேனர்கள் வைத்து பயணிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்படும்.திருமணம், மத திருவிழாவின் போது, புதுச்சேரி நகராட்சி மன்றத்தின் 28-01-2019 அன்று அறிவிப்பின்படி, திருமண மண்டபங்கள் அல்லது கோவில்களின் நுழைவாயிலில் 10க்கு 10அடி அளவுள்ள இரண்டு பேனர்கள் மட்டுமே பொது போக்குவரத்திற்கு இடையூர் இல்லாமல் வைக்க அனுமதிக்கப்படும். சாலை ஓரங்கள், நான்கு முனை சந்திப்புகளில் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பது கண்டறியப்பட்டால். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.