புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் ஆட்சியை அகற்றுவதற்கான, முதல் படியாக, வரும் லோக்சபா தேர்தலை அணுக வேண்டும், என எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசினார். புதுச்சேரியில் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம், நேற்று கனக செட்டிகுளத்தில் பிரசாரத்தை துவக்கினார். இதில் பங்கேற்ற எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் என்று, ஓட்டு கேட்க வரும், என்.ஆர் காங்., - பா.ஜ.,வினரிடம், பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஏனென்றால், அதற்காக தான் கூட்டணி அமைத்ததாக அவர்கள் சொன்னார்கள். மத்திய பா.ஜ., அரசு, மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று கூறி விட்டது.புதுச்சேரி - நாகப்பட்டினம், ரயில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோல, துறைமுகம் விரிவாக்கம் குறித்தும் எந்த தகவலும் இல்லை. புதுச்சேரியில் விமான போக்குவரத்து விரிவாக்கத்திற்கு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரியை நீண்ட கால ஆண்ட முதல்வர் ரங்கசாமி தான். அவரது ஆட்சிக்காலத்தில், திறக்கப்பட்ட மற்றும் மூடப்பட்ட கார்ப்பரேஷன்கள் குறித்த கணக்கை அவர் தான் சொல்ல வேண்டும். காரைக்கால் துறைமுகத்தை, அதானிக்கு கொடுத்து, கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றனர். மின்சாரத்துறையை தனியார் மயமாக்கி வருகின்றனர். தற்போதுள்ள புதுச்சேரி, பழைய புதுச்சேரியாக மாற, இங்கு நடக்கும் ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு முதல் படியாக, இந்த தேர்தலை அணுக வேண்டும். இந்த தேர்தலை வழக்கம் போல நடக்கும் தேர்தல் என நினைக்காமல், நம்முடைய தன்மானத்திற்கும், சுய கவுரவத்திற்கும் விடப்பட்ட சவாலாக நினைத்து, அனைவரும் ஓர் அணியில் நின்று பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.