| ADDED : ஜூலை 03, 2024 05:41 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 3வது நாளாக நடந்த ஏலத்திலும் சாராயக்கடைகள் ஒன்று கூட ஏலம் போகாததால், அனைத்து சாராய கடைகளுக்கும் சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன. சாராயக் கடைகளுக்கு ஆரியப்பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசின் சாராய வடிசாலையில் இருந்து குறைந்த விலையில் சாராயம் வழங்கப்படும்.சாராயக் கடைகளுக்கு மாத கிஸ்தி தொகை நிர்ணயிக்க, மூன்று ஆண்டிற்கு ஒரு முறை, கலால் துறை மூலம் மின்னணு முறையில் பொது ஏலம் விடப்படும். கடந்த 29 ம் தேதி முதல் நாள் ஏலம் துவங்கியது. சாராயக்கடை உரிமையாளர்கள் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கள்ளுக்கடைகள் மட்டும் 14 கடைகள் ஏலம் போனது.கிஸ்தி தொகை 5 சதவீதம் குறைத்து 2வது நாள் நடத்திய ஏலத்திலும் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். 2வது நாள் ஏலத்தில் 9 கள்ளுக்கடைகள் ஏலம் போனது.நேற்று 3வது நாள்சாராய கடைகளுக்கு மேலும் 5 சதவீத கிஸ்தி என மொத்தம் 15 சதவீதம் கிஸ்தி தொகை குறைத்து ஏலம் விடப்பட்டது. அதிலும் சாராயக்கடை வியாபாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் 3ம் நாள் ஏலத்திலும் ஒரு சாராயக்கடை கூட ஏலம் போகவில்லை. கள்ளுக்கடைகளில் ஆண்டியார்பாளையம் ரூ. 9051, சிலுக்காரிப்பாளையம் ரூ. 8179க்கு ஏலம் போனது.சாராயக்கடை நடத்துவதிற்கான அனுமதி கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்து விட்டது. மேலும், இந்தாண்டு சாராயக்கடை நடத்தயாரும் முன்வரவில்லை. இதனால் அனைத்து சாராயக்கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்து வருகின்றனர்.சாராயக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும், கள்ளத்தனமாக சாராயம் விற்றால் நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதி போலீசாரிடம் கலால் துறை தெரிவித்துள்ளது. விற்பனை ஆகாத சாராயத்தை சில இடங்களில் மறைத்து வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.சாராயக்கடை வியாபாரிகள் கூறுகையில்; போட்டி காரணமாக ரூ. 10 லட்சம் ஏலம் போக கூடிய கடையை கடந்த ஆண்டு ரூ. 15 லட்சத்திற்கு எடுத்தோம். ஆனால் ரூ. 5 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையாகி பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சாராய ஏலத்தில் அதிக கிஸ்தி தொகை செலுத்தி ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஒரிரு நாட்கள் கழித்த பின்பே ஏலம் போக வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.