| ADDED : ஆக 07, 2024 05:35 AM
வில்லியனுார் : தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழுவினர் தேரை ஆய்வு செய்தனர்.வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிரசித்திபெற்ற பிடாரி மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆக., மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இவ்வாண்டு தேர் திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (7ம் தேதி) இரவு 7:00 மணியளவில் பிடாரி மீனாட்சி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 12ம் தேதி வரை இரவு 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 13ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், தேர் திருவிழா 14ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணியளவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சாய்சரவணன்குமார் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.தேர் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தேர் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.