| ADDED : ஜூலை 26, 2024 04:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.பொதுக்குழுவில், கூட்டமைப்பின் கவுரவ தலைவராக சேஷாச்சலம், ஆலோசகராக ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் தலைவராக மணிகண்டன், துணைத் தலைவர்களாக ஆறுமுகம், அருண்குமார், ஜெயராமன், அம்பேத்கர், தேன்மொழி, பொதுச் செயலாளராக பிரபாகரன், துணைச் செயலாளர்களாக ஸ்ரீதர், சிவராமன், வினோத், வியகுமார், ரமணி, பொருளாளராக திலகர், இணை பொருளாளராக பாலச்சந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், காலியாக உள்ள முதுநிலை, இளநிலை கணக்கு அதிகாரி, கண்காணிப்பாளர், அமைச்சக உதவியாளர், மேல்நிலை, இளநிலை எழுத்தர் போன்ற பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.அனைத்து அமைச்சக ஊழியர் சங்கங்கள் மூலமாக பெறப்பட்ட கருத்துக்களின்படி உடனடியாக பதவி கட்டமைப்பை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சக உதவியாளர் பணி நியமன விதியை நுாறு சதவீதம் பதவி உயர்வு வழங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.பதவி உயர்வு பெற்ற அனைத்து இளநிலை எழுத்தர்களுக்கும் 8 ஆண்டுகள் முடித்த தேதியில் இருந்து முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். துறைரீதியான தேர்வுகளை ஆண்டுக்கு 2 முறை காலத்தோடு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.