| ADDED : ஆக 28, 2026 08:22 PM
புதுச்சேரி: பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பேசியதாவது: கூட்டம் நடக்கும் போது அமைச்சர்கள் சபையில் இருப்பதில்லை. இருந்தால், எங்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு 19 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால், பாப்ஸ்கோ, பாசிக் ஊழியர்கள் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 மின்சார ஆட்டோ வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை 60 ஆக வாங்கி, தொகுதிக்கு 2 வீதம் வழங்க வேண்டும். வேளாண் துறைக்கு குறை அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயம் செய்ய வேண்டும். காரைக்கால் வேளாண் கல்லுாரியில் காய்கறிகள் பதப்படுத்தும் குடோன் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘கடந்த 1991ம் ஆண்டு புதுச்சேரியில் 30 ஆயிரம் எக்டர் பரப்பளவில் விவசாய நிலம் இருந்தது. தற்போது 10 ஆயிரம் எக்டராக குறைந்துள்ளது. எனவே விவசாய நிலபரப்பிற்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.