விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், ஒப்பந்ததாரரை மாற்றுவது குறித்து நகாய் அதிகாரிகள் முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையில் 166 கிலோ மீட்டர் துாரத்துக்கு வி.கே.டி., சாலைப் பணிகளை, மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (நகாய்) ரூ.2586.10 கோடி திட்ட மதிப்பில், கடந்த 2018ம் ஆண்டு துவக்கியது. இப்பணிகளை எளிதாக விரைந்து முடித்திட மூன்று பிரிவுகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டது.அதன்படி, விக்கிரவாண்டி - பின்னலுார் இடையிலான 66 கி.மீ., துார சாலை பணி ரூ.711 கோடி மதிப்பில் மும்பை ரிலையன்ஸ் இன்ப்ரா ஸ்ரெக்சர் நிறுவனத்திற்கும், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் இடையிலான 51 கி.மீ., துார பணி ரூ.956.23 கோடிக்கும், சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான 48 கி.மீ., சாலை பணி ரூ.918.87 கோடிக்கு வதோதராவைச் சேர்ந்த படேல் இன்ப்ரா ஸ்ரெக்சர் நிறுவனத்திற்கும் டெண்டர் விடப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடித்து தர ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில், படேல் நிறுவனம் பின்னலுார் - சோழபுரம், சோழபுரம் - தஞ்சாவூர் வரை 99 கி.மீ., துாரத்திற்கு 95 சதவீத சாலைப் பணிகளை முடித்து இறுதிக்கட்ட நிலையில் உள்ளது.விக்கிரவாண்டியிலிருந்து பின்னலுார் வரையிலான பணியை டெண்டர் எடுத்த மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்தினர் பணிகளை நேரடியாக செய்ய போதுமான இயந்திர வசதி மற்றும் ஆள் பலம் இல்லாததால், துணை ஒப்பந்ததாரரை நம்பி பணிகளை ஒப்படைத்தது. இதனால், பல்வேறு நிலையில் சாலை பணி தொடர்ந்து நடைபெறாமல் முடங்கியது.சாலைப் பணிகளை சரிவர செய்யாதது குறித்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நகாய் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய போதெல்லாம், கால அவகாசம் கேட்டதால் பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் நிலுவையிலேயே உள்ளது.இதனால், கடந்த மாதம் நகாய் நிறுவனம், பணிகள் நிலுவையில் உள்ளது குறித்து விளக்கம் கேட்டு ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு இறுதிக்கட்ட நோட்டீஸ் வழங்கியது. கடந்த மார்ச் மாதம் முதல் லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால், புதிய ஒப்பந்ததாரர் நியமனம் குறித்து நகாய் முடிவெடுக்க முடியாமல் இருந்தது.இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, நகாய் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க உள்ளனர்.நீண்ட காலமாக பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தை, ஒப்பந்தத்தில் இருந்து நீக்கிவிட்டு, புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்ய உள்ளதாக, நகாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், போக்குவரத்து முக்கியத்துவம்வாய்ந்த வி.கே.டி., சாலை பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.