| ADDED : ஏப் 18, 2024 05:02 AM
புதுச்சேரி : பிறந்த ஆண் குழந்தை உடனே இறந்ததால், தனியார் மருத்துவமனை மீது தந்தை புகார் அளித்தார்.அரும்பார்த்தபுரம், வி.மணவெளி, திருவேணி நகரைச் சேர்ந்தவர் பிரசன்னன், 31; டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் நடத்தி வருகிறார். இவரது மனைவி பவ்யா, 34. இவருக்கு முதல் குழந்தை கருவுற்றது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள டாக்டர் சாந்த மைக்கேல் கிளினிக்கில் மாதந்தோறும் பரிசோதனை செய்து வந்தார்.கடந்த 15ம் தேதி பிரசவ தேதி குறிப்பிட்டு இருந்தால் அன்று மதியம் 12:00 மணிக்கு, டாக்டரின் பரிந்துரை பெயரில் காந்தி வீதியில் உள்ள நியூமெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 16ம் தேதி காலை 4:03 மணிக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தினர் குழந்தையை பார்த்தனர்.காலை 8:00 மணிக்கு தடுப்பூசி போடுவதாக கூறியுள்ளனர். அதன் பிறகு காலை 9:45 மணிக்கு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக குழந்தையின் தந்தை பிசன்னன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கதிர்காமம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட குழந்தை உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.