| ADDED : ஜூன் 30, 2024 06:29 AM
புதுச்சேரியில் நாளை அமலாகும் புதிய சட்டங்கள் குறித்து போலீசாருடன் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா ஆலோசனை நடத்தினார்.ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1860ல் கொண்டுவரப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம், 1898ல் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம், 1872ல் கொண்டுவரப்பட்ட இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சக் ஷவா ஆகிய முன்று சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.பல்வேறு மாற்றங்கள், புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள இச்சட்டம் நாளை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் அமலாகிறது. இதற்காக விழா நடத்தவும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும், சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள், சுய உதவி குழுக்கள் அழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் புதிய சட்டங்கள் குறித்து புதுச்சேரியில் ஐ.பி.எஸ்., அதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை 1,500 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் அமல்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா ஆலோசனை வழங்கினார்.இதில், சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி.க்கள் பக்தவச்சலம், வீரவல்லவன், செல்வம், ஜிந்தாகோதண்டராமன், மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், செந்தில்குமார், பாலமுருகன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.