| ADDED : ஆக 21, 2024 11:59 PM
திருக்கனுார்: ஆசிய சாம்பியன்ஷிப் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் புதுச்சேரி வீரர் தேர்வாகியுள்ளார்.மண்ணாடிப்பட்டு தொகுதி செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் மணிகண்டன், 18; கோயம்புத்துார் தனியார் பல்கலைக்கழகத்தில் பி.காம்., தொழில்முறை கணக்கியல் இரண்டாம் ஆண்டு மாணவர். இவர் புதுச்சேரி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள சாய் அகாடமியில் ஹேண்ட்பால் பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே, ரஷ்யாவில் வரும் 3ம் தேதி துவங்கும் ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் ஹேண்ட் பால் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் 16 பேர் கொண்ட இந்திய அணியில் மணிகண்டன் தேர்வாகியுள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் ஹேண்ட்பால் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியில் தேர்வாகியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை மணிகண்டன் பெற்றுள்ளார். அவர், விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹேண்ட் பால் விளையாட்டு வீரர், ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பது அக்கிராமத்திற்கு மேலும் பெருமை சேர்ந்துள்ளது. அவரை கிராம பொதுமக்கள் பாராட்டினர்.