| ADDED : ஜூன் 28, 2024 06:12 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.குரும்பாப்பேட்டில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டு விழா, கடந்த 18 நாட்களாக நடந்து வந்தது. விளையாட்டு விழாவை முன்னிட்டு, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தனியாக விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதன் நிறைவு விழா கல்லூரியின் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. கல்லுாரி மாணவர் பேரவை தலைவர் ஆரியா வரவேற்றார்.கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியின் இயக்குனர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. கல்லுாரியின் டீன் செழியன் முன்னிலை வகித்தார். விளையாட்டுத்துறை இயக்குனர் முகமது அசிம் மேற்பார்வையில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடந்தது.இந்த ஆண்டுக்கான தடகள போட்டிக்கான சுழற்கோப்பையை மூன்றாம் ஆண்டு மாணவர்களும், அனைத்து விளையாட்டுக்கான ஒட்டுமொத்த சுழற்கோப்பையை முதலாம் ஆண்டு மாணவர்களும் பெற்றனர். பொதுச் செயலர் தனுஷ் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.