உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திறந்தவெளி பார்ஆக மாறிய தாகூர் கல்லுாரி மைதானம்; ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்துவார்களா?

திறந்தவெளி பார்ஆக மாறிய தாகூர் கல்லுாரி மைதானம்; ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்துவார்களா?

புதுச்சேரி : தாகூர் கலைக் கல்லுாரி மைதானம் திறந்தவெளி 'பார்'ஆக மாறியுள்ளதுடன், பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி அலங்கோலமாக காட்சியளிக்கிறது.லாஸ்பேட்டையில், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந் துள்ளது. இந்த கல்லுாரியின் விளையாட்டு மைதானம், கல்லுாரிக்கு பின்புறத்தில் ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ளது.தாகூர் கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, லாஸ்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களும் இங்கு வந்து விளையாட்டுகளில் பயிற்சி செய்கின்றனர். கிரிக்கெட் விளையாடுகின்றனர்.இளைஞர்கள் கூட்டத்துடன் காலையில் பரபரப்பாக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானம், இரவு நேரத்தில் திறந்தவெளி பாராக மாறி விடுகிறது. மது குடிப்பவர்கள் தாங்கள் அருந்திய பிராந்தி, விஸ்கி, பீர் பாட்டில்களை மைதானத்திலேயே ஆங்காங்கு வீசி செல்கின்றனர்.சிலர் போதை தலைக்கேறியதும் மது பாட்டில்களை சாலையோரங்களில் வீசி உடைத்துவிட்டு செல் கின்றனர். இது, அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்களின் பாதங்களை பதம் பார்ப்பது தொடர்கதையாக உள்ளது.மேலும், சிக்கன் உள்ளிட்ட சைடிஷ் இறைச்சி கழிவுகளையும் குடிமகன்கள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கழிவுகளை சாப்பிட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை, வாக்கிங் செல்வோரை துரத்தி கடிக்கின்றன.கல்லுாரி வளாகம் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லுாரி விளையாட்டு மைதானம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறிக் கிடக்கிறது.பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள், ஐஸ் கீரீம் கப்புகள், கேக் அட்டை பெட்டிகள், டீ கப்புகள், ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் முகம் சுளிக்கும் வகையில் மைதானம் முழுவதும் சிதறி கிடக்கின்றன.மேலும், விளையாட்டு மைதானத்தை சுற்றியுள்ள மதில் சுவரையொட்டி பிளாஸ்டிக் குப்பைகள் குவியல் குவியலாக கிடக்கின்றன.கல்லுாரி விளையாட்டு மைதானத்திற்கு கேட் இல்லை. இதனால், குடிமகன்கள், சமூக விரோதிகள் மைதானத்தை திறந்தவெளி பாராக மாற்றி சீர்குலைத்து வருகின்றனர். இப்படியே போனால் கல்லுாரியின் சூழலும் முற்றிலும் சீர்குலையும் அபாயமும் எழுந்துள்ளது.எனவே, தாகூர் கலைக் கல்லுாரி விளையாட்டு மைதானம் திறந்தவெளி பாராக மாறுவதை தடுக்க, கல்லுாரி நிர்வாகமும், லாஸ்பேட்டை போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிமகன்கள் அட்டகாசம்

தாகூர் கல்லுாரி விளையாட்டு மைதானம் மட்டு மின்றி, ஹெலிபேடு மைதானம், ஏர்போர்ட் சாலை முழுவதுமே திறந்தவெளி பாராக மாறி விட்டது.இரவில் மட்டுமல்லாமல், பகலிலேயே குடிமகன்கள் சாலையோரத்தில் அமர்ந்து எந்தவித பயமின்றி குடிக்கின்றனர். இதனால், அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், இந்த வழியாக தான் ஏர்போர்ட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த திறந்தவெளியில் சாலையில் அமர்ந்து குடிப்பது மாநிலத் திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குடிமகன்களையும், சமூக விரோதிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை