பாகூர்: அவதுாறு பரப்பும் வகையில் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறைத் துறை உதவி கண்காணிப்பாளர், போலீசில் புகார் அளித்தார்.பாகூர் மூலநாதர் கோவில் மதில் சுவரில், வெடிகுண்டு வீசி சோதிப்பதாகவும், அந்த கும்பலுடன் சிறை வார்டன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரலானது.இதுதொடர்பாக, பாகூர் போலீசார் நடத்திய விசாரணையில், வீடியோவில் இருப்பவர்கள் சிறுவர்கள் என்பதும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெடிக்காத சில பட்டாசுகளில் இருந்த வெடி மருந்தை எடுத்து, பேப்பரில் சுற்றி விளையாட்டாக வீசியதும் தெரியவந்தது.இந்நிலையில், பாகூரை சேர்ந்த சிறைத் துறை உதவி கண்காணிப்பாளர் அமிழ்தன், பாகூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், என்னை பற்றி அவதுாறான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், என்னுடைய புகைப்படமும், சிறுவர் பட்டாசு வெடிப்பது போன்ற வீடியோ, புதுவை பாஸ்கரன் என்னை பற்றி அவதுாறாக பேசும் வீடியோவும் இருந்தது. எனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.பாஸ்கரன் கடந்த ஆண்டு ஒரு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருந்தபோது, உதவி கண்காணிப்பாளர் என்ற முறையில், அவர் என்னை அணுகி, சிறை விதிகளுக்கு அப்பாற்பட்டு சில வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என்றார். அதற்கு மறுத்து விட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கொலை குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு, பழிவாங்கும் நோக்கில் என்னை பற்றி அவதுாறான வீடியோவை பரப்பி உள்ளார்.என் மீதுள்ள காழ்புணர்ச்சியால், சமூக வலைதளங்களில் அவதுாறான வீடியோவை பரப்பி எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார். எனவே, திப்புராயப்பேட்டையை சேர்ந்த பாஸ்கரன் மீதும், அவருக்கு பின்னால் இருக்கும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.