புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னை செல்ல, போதிய பஸ்கள் இல்லாததால், நேற்றிரவு பயணிகள் கடும் அவதியடைந்தனர். புதுச்சேரியில் கடந்த, 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதனால், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கால் வசித்தவர்கள், ஓட்டுப்போடுவதற்கு, சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.தேர்தல் முடிந்து, அடுத்த இரு தினங்கள் ஓய்விற்கு பிறகு, நேற்று மாலை மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். அதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பயணிகள் ஒட்டுமொத்தமாக சென்னைக்கு கிளம்பினர். இதனால், நேற்று மாலை 6:00 மணிக்கு, மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உண்டானது. அதேபோல, இ.சி.ஆர்., சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சென்னையில் இருந்து இந்த இரு மார்க்கங்கள் வழியாகவும், புதுச்சேரிக்கு பஸ்கள் வர நீண்ட நேரம் ஆனது.இதையொட்டி, புதுச்சேரி பஸ் நிலையத்தில் நேற்று மாலை 6:00 மணியில் இருந்து பயணிகள், போதிய பஸ்கள் கிடைக்காமல், பெரும் சிரமத்திற்குள்ளாகினர். நேரம் செல்ல செல்ல, போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனால், பஸ் நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் கூறுகையில், 'வழக்கமாக, இ.சி.ஆர் மற்றும் பைபாஸ் வழியாக சென்னைக்கு, குறைந்த பட்சம், 30 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். ஆனால், தற்போது, இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கிறோம்' என்றனர்.