| ADDED : ஏப் 07, 2024 05:29 AM
சிதம்பரம் : காங்., கட்சியின் தேர்தல் அறிக்கை போலியானது. வெற்று அறிக்கை என பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.சிதம்பரத்தில் நேற்று அவர் கூறியது:கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன், மத்திய அரசை குறை கூறுவதற்கும், பிரதமர் மோடியை வசைபாடுவதற்கு மட்டுமே நேரத்தை செலவழித்துள்ளார். தொகுதி முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை.பிரதமரின் ஆண்டிற்கு 6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமாக 5 லட்சம் விவசாயிகள் இந்த தொகுதியில்தான் பயன் பெற்றுள்ளனர். திருமாவளவன், கோவிலை இடிப்பேன் எனவும், கோவிலுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் பேசுவதை முழு நேர தொழிலாக வைத்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் 2019ல் பெரிய பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டார். பண பலம், மீடியா பலத்தை வைத்து மோடி எதிர்ப்பு அலையை உருவாக்கி அறுவடை செய்தார். ஆனால் இப்போது அது நடக்காது. கடந்த 2014ல் பெண்களுக்கு மாதம் ஆயிரம் தருவோம் என காங்., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், 2014, 2019 தேர்தல்களில் காங்., கட்சியை அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக கூட மக்கள் தேர்தெடுக்கவில்லை. இதுபோன்ற காங்., தேர்தல் அறிக்கை போலியானது. வெற்று அறிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.