பாகூர்; கிருமாம்பாக்கம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, கைக் குழந்தையுடன் தாய் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 35; ரேஷன் கடை ஊழியர். ரேஷன் கடை மூடப்பட்டதால், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், கன்னியக்கோவில், புதுநகர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிபா 30; என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் கைக் குழந்தை உள்ளனர்.இந்நிலையில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதில், கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் பிரதிபா, பெண் குழந்தையுடன் புதுநகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இது தொடர்பான புகாரின் பேரில், வில்லியனுார் மகளிர் போலீசார், பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை பிரதிபா தனது கைக் குழந்தையுடன், உறவினர்கள் இருவருடன் பிள்ளையார்குப்பத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார்.அப்போது, அவரது மாமியார், மாமனார் இருவரும், அவர் உள்ளே வராதபடி வீட்டின் கேட்டை பூட்டிக் கொண்டனர். ஆத்திரமடைந்த பிரதிபா, தன்னையும், தனது குழந்தையும் கணவருடன் சேர்ந்து வாழ, மாமனார், மாமியார் தடுப்பதாக கூறி, குழந்தையுடன் வீட்டின் முன், சாலையில் அமர்ந்து உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரதிபாவை சமாதானம் செய்து, அருள்தாஸ் வீட்டில் உள்ளவர்களை பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்த இரண்டாவது ஆண் குழந்தையை பெற்று, தாயிடம் ஒப்படைத்து, நீதி மன்றத்தை அணுகி பிரச்னையை தீர்வு காணும்படி ஆலோசனை வழங்கி அனுப்பினர். இதையடுத்து பிரதிபா தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.