| ADDED : பிப் 14, 2024 03:47 AM
புதுச்சேரி : கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி வளாகத்தில் இந்தாண்டு புதிதாக துவங்கிய செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான ஒளிவிளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., பிம்ஸ் செவிலியர் கல்லுாரி முதல்வர் மோனி, கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், புல முதல்வர் ராமச்சந்திரன் வி பட், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி சுகாதாரத்துறையில் தற்போது,155 செவிலியர் பணியிடங்கள் நிரப்பி உள்ளோம். அதேபோல, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 200 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.லண்டன், அரபு நாடுகளில், செவிலியர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. புதுச்சேரி செவிலியர்களை வெளிநாடுகளில் பணியமர்த்த, நிறைய அலுவலகங்கள் கூட உள்ளன. அதனால் மாணவர்கள் கவனத்தோடு படிக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். மதிப்பெண் அடிப்படையில், 'சீனியாரிட்டி'க்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி, பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.