புதுச்சேரி : நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக 10ம் தேதி வரை மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு சென்டாக்கின் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் கடந்த மே 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பிக்க மே 22ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது.மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று மே 31ம் தேதி ஆன் லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவியர் விண்ணப்பித்து வந்தனர். இறுதி நாளான நேற்று ஏராளமான மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.நேற்று வரை 16,956 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ள சூழ்நிலையில், அவர்களில் 13,856 பேர் விண்ணப்பத்தினை முழுதுவமாக சமர்ப்பித்து பூர்த்தி செய்துள்ளனர். சான்றிதழ் கிடைக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் 3,100 மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்யவில்லை.அதையடுத்து, விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க சென்டாக் முடிவு செய்துள்ளது. நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிப்பு செய்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் மாதம் 5ம் தேதி வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடவும், அடுத்து ஆட்சேபனைகள் வரவேற்று, திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் 9ம் தேதி வெளியிடப்படும் என்று சென்டாக் அறிவித்து இருந்தது.ஆனால் இரண்டு முறை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அட்டவணைப்படி வரைவு தரவரிசை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒருபக்கம் காலக்கெடு நீட்டிப்பு இருந்தாலும், மற்றொரு பக்கம் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.எனவே, இரண்டாவது காலக்கெடு நீட்டிப்பின்போது, ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்தினை சமர்பித்த 13,856 மாணவர்களது விண்ணப்பம் முடக்கம் செய்யப்படும். அவர்கள் தங்களது கவுன்சிலிங் முன்னுரிமைகளை எடிட் செய்ய முடியாது. புதிய படிப்புகளை மாற்றம் செய்ய முடியாது.அதே வேளையில் அரைகுறையாக விண்ணப்பம் சமர்பித்துள்ள மாணவர்கள், இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு விண்ணப்பிக்க முடியும்.நீட் அல்லாத தொழில் படிப்புகளில் 5,264 இடங்கள், கலை அறிவியல் கல்லுாரிகளில் 4,320, நுண்கலை படிப்புகளில், 75, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பில் 334 இடங்கள் என மொத்தம் 9,993 இடங்கள் உள்ளன.ஆனால் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு இந்தாண்டு 16,956 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ள சூழ்நிலையில், 6,963 பேர் சீட் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நீட் அல்லாத படிப்புகளுக்கு இந்தாண்டு கடும் போட்டி காத்திருக்கிறது.