முதலியார்பேட்டை நயினார் மண்டபம் நாகாத்தம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. செடல் திருவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது. திருவிழாவிற்கு வருபவர்களை வரவேற்பதாக கூறி, கடலுார் சாலை முழுதும் அரசியல் கட்சிகள்,பிரமாண்ட பேனர்கள் வைத்துள்ளன.அம்மன் படத்தினை கண்ணுக்கு தெரியாமல் சின்னதாக போட்டுவிட்டு, தங்களுக்கு பிடித்த முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், அவர்களது அடிபொடிகளின் படத்தை பெரிதாக போட்டு, கடலுார் சாலை முழுதும் பேனர்கள் வைத்துள்ளனர்.இதுகாண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.முன் உதாரணமாக இருக்க வேண்டிய தி.மு.க., அ.தி.மு.க., காங்., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பாகுபாடின்றி பேனர்களை வைத்துள்ளனர். இதை பார்த்து, 'புள்ளிங்கோ'களும் விதவிதமாக போஸ் கொடுத்து பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர்கள் அனுமதி பெற்று வைக்கவில்லை. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தின் சட்டப்படி அனுமதி பெற்றதற்கான கடிதம் இந்த பேனர்களில் ஒட்டப்படவில்லை. நகரின் அழகினை கெடுக்கும் பேனர்களை அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது என, அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டு விமர்சனம் செய்கின்றன.ஆனால் ஊருக்கு தான் உபதேசம் தமக்கு இல்லை என்பதுபோல் தங்களுடைய கட்சி தொண்டர்கள் பேனர்கள் வைப்பதை அனுமதிக்கின்றன. இந்த இரட்டை வேடம் எதற்கு. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைச்சரே பா.ஜ., மேலிட பொறுப்பாளரை வரவேற்று பேனர் வைக்கிறார்.அடுத்து ஆடி மாதத்தில், அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். பேனர்கள் வைப்பது கண்டமேனிக்கு அதிகரிக்கும். அப்படியே பிறந்த நாள், காதுகுத்து, கல்யாணம், மஞ்சள் நீர் என, சாலைகளில் மீண்டும் பேனர் கலாசாரம் துளிர்விடும்.கோவில் திருவிழாக்களில் வைக்கப்படும் பேனர்களை அரசு முறைப்படுத்தினால் கட்டுப்படுத்த முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனக்கு பிறந்த நாள் பேனர் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். அதை பின்பற்றி எதிர்கட்சி தலைவர் சிவா பிறந்த நாள் விழா பேனர் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், கடலுார் சாலையில் எம்.எல்.ஏ., சம்பத்தை வரவேற்று பேனர்கள் வைத்துள்ளது எதிர்கட்சி தலைவர் சிவாவுக்கு தெரியுமா...
அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை விழாவிற்கு அழைக்கும்போதே, தன்னை வரவேற்க பேனர்கள் வைக்க வேண்டாம். இல்லையென்றால் விழாவிற்கு வர மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்தால் இதுபோன்ற பேனர்கள் இடம்பெறாது. அரசியல் கட்சியினரிடம் மனம் இருந்தால் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். ஆனால் அரசியல் கட்சிகள் பேனர் விஷயத்தில் பிள்ளைகளை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றனர்.