| ADDED : ஜூன் 17, 2024 07:03 AM
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகள் 101ல், கடந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, பி.ஏ.,- பி.எஸ்.சி., உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் அனைத்தும் இனி 4 ஆண்டு படிப்புகளாக மாறியுள்ளன.அதில் சேருவோர் விரும்பும் நேரத்தில் வெளியேறலாம். ஓராண்டு படித்து முடித்து வெளியேறினால் சான்றிதழ் பெற அனுமதிக்கப்படும். பொருளாதார பிரச்னை, உடல் நலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்திற்காக பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி அல்லது வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பல்கலையில் சில ஆண்டுகள் கழித்து கூட படிப்பை தொடரலாம். புதிய கல்வி கொள்கையின்படி, புதுச்சேரி மாநிலத்தில் 20 இணைப்பு கல்லுாரிகள் இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ளன. ஆனால், புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப கல்லுாரிகளில் உட்கட்மைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளதால் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன.உயர் கல்வியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரி அரசு கல்லுாரிகளை மேம்படுத்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:புதிய கல்வி கொள்கையால், பி.ஏ., பி.எஸ்சி., உள்ளிட்ட படிப்புகள் அனைத்தும் நான்கு ஆண்டு படிப்புகளாகமாறி விட்டன. மூன்றாம் ஆண்டு முடிந்ததும் நான்காம் ஆண்டில் மாணவர்கள் ஆராய்ச்சி தேர்வு செய்தால், அடுத்த நேரடியாக பி.எச்.டி., செல்லலாம். இல்லை வெறும் டிகிரியை தேர்வு செய்தால் நேரடியாக எம்.ஏ., செல்லலாம்.ஆனால், புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் கல்லுாரிகளில் போதிய ஆராய்ச்சி ஆய்வகங்கள் இல்லை. இது மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் ஆராய்ச்சிக்கான தனி நிதி ஒதுக்கி ஆய்வகங்களை அரசு மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக துவக்கவேண்டும்.புதிய கல்வி கொள்கை ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு கல்லுாரிகளையும் நேரில் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, இந்த ஆராய்ச்சி ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும்.இதேபோல் முதல் மூன்று பருவங்ககளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக பிரபல தொழில் நிறுவனங்களுடன் கல்லுாரிகள் இணைந்து திறன் மேம்பாட்டு கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதுவும் திட்டமிடல் இல்லாமல் உள்ளது.பல கல்லுாரிகளில் பேராசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும் தலை துாக்கியுள்ளது. இப்படியே போனால் புதிய கல்வி கொள்கை கற்றல் கடினமாகி விடும். எனவே காலியாக உள்ள பேராசிரியர், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புதிய கல்வி கொள்கையின் பலன்களை மாணவர்கள் அறுவடை செய்ய முடியும்' என்றனர்.