| ADDED : ஜன 15, 2024 06:42 AM
புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் மார்கழி மாத நகர்வல நாமசங்கீர்த்தன நிறைவு விழா நேற்று நடந்தது.புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், மார்கழி மாதம் முழுதும் அதிகாலையில், பண்டைய வழக்கப்படி பஜனை நடந்து வந்தது. இதன் நிறைவு நாமசங்கீர்த்தனம், நாட்டியம் நேற்று நடந்தது.காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை, சிவதாஸ் பாகவதர் தலைமையில் நாமசங்கீர்த்தனமும், சரவணன் நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி துவங்கியது. காந்தி வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி வழியாக அண்ணா சாலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் காந்தி வீதி வழியாக வேதபுரீஸ்வரர் கோவிலில் நிறைவுபெற்றது.இதில், லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி, மாதா அமிர்தானந்தமயி பள்ளி, இ.சி.ஆர் சங்கரவித்யாலயா பள்ளி, காந்தி வீதி சங்கர வித்யாலயா பள்ளி, வாசவி பள்ளியின் சிறுவர் சிறுமியர்கள், ஆன்மிக பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் நடந்த நிறைவு விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சமிதி தலைவர் வெங்கட்ராமன், துணை தலைவர் சீதாராமன், செயலாளர் ரவி, பொருளாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பஜனையில் பங்கேற்று நாட்டியம் ஆடிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.