| ADDED : மார் 16, 2024 11:18 PM
புதுச்சேரி எல்லையான முள்ளோடையில், லோக்சபா தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை, சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கொட்டாரு ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், புதுச்சேரியின் எல்லை பகுதிகளான முள்ளோடை, காலாப்பட்டு, மடுகரை, கோரிமேடு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கலால்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தேர்தல் நடத்தும் துணை அதிகாரியான சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கொட்டாரு நேற்று மாலை புதுச்சேரி - கடலுார் சாலையில், முள்ளோடையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர், 'அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும். உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்திட வேண்டும். அனைத்து சோதனைகளையும் வீடியோ பதிவு செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி சோதனை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சோதனை சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.