| ADDED : செப் 13, 2026 11:52 PM
புதுச்சேரி: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் அமைச்சர்கள் அளவிலான தேசிய மாநாடு மும்பையில் நடந்தது. மாநாட்டில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, புதுச்சேரியில் இருந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி தொழிலாளர் துறையில் உள்ள வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்; அதனுடன் மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக அவர்களுக்கு பொருந்தும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; எலக்ட்ரீஷியன் திறன் சான்றிதழ்கள் இல்லாத தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் துறை மூலம் 7 நாட்கள் பயிற்சி அளித்து, பயிற்சி கால உதவித்தொகை வழங்குவதுடன், சான்றிதழும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்; என வலியுறுத்தினார். மேலும், அவர் கட்டுமான தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதுச்சேரியில் 4, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு இடம் தொழிலாளர்கள் ஓய்வு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.