| ADDED : ஜன 25, 2024 04:38 AM
புதுச்சேரி, : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லுாரி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் களப்பயிற்சி வழங்கியது.மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் கல்லுாரிக்கு, கடலுார் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வேளாண் தொழிற்கல்வி அறிவியல் பிரிவு மாணவர்கள், நேற்று களப்பயணம் மேற்கொண்டனர்.வேளாண் துறை பேராசிரியர்கள், மாணவர்களுக்கு நேரடி செயல்முறையில் விளக்கம் அளித்தனர். வேளாண் அறிவியல் கல்வியின் முக்கியத்துவம், அதில் மேற்கொள்ளப்படும் அறிவியல் முறைகள், பயிர் சாகுபடி முறைகள், பூச்சு மற்றும் நோய்த்தாக்குதல், மண் தன்மையறிதல், பருவ மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். வேளாண் கல்லுாரியின் பண்ணை மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி முறைகள் குறித்து மாணவர்களுக்கு பண்ணை மேலாளர் செந்தில்குமார், பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி உழவியல் துறை உதவி பேராசிரியர் ராஜேந்திர பிரசாத் விளக்கினர்.பயிற்சியில் 48 மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலுார் நகராட்சி பள்ளி தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு ஆசிரியர் ரவி மற்றும் உதவி பேராசிரியர் ராவ் கெலுஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.