| ADDED : ஜன 30, 2024 03:45 AM
புதுச்சேரி, : பஸ்சில் பயணம் செய்ய முன்பதிவு செய்த சீட்டில் மற்றொருவர் அமர்ந்திருந்ததால், கண்டக்டரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி கந்தப்பமுதலியார் வீதியை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது 18 வயது மகள், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் சென்னைக்கு செல்வதற்கு இவரது தந்தை, புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்சில் முன்பதிவு செய்தார். அவருக்கு முன்பதிவு செய்யப்பட்டதற்கான, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.அவரது மகள் பஸ்சில் ஏறிய போது, முன்பதிவு செய்யப்பட்ட சீட்டில் மற்றொரு நபர் அமர்ந்திருந்தார். இதுபற்றி, பஸ் கண்டக்டரிடம், பெண்ணின் தந்தை முறையிட்டார். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், ஆவேசமடைந்த, அந்த பெண்ணின் தந்தை, பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., முன்திவு செய்யும் கவுன்டர் முன்பு சிலருடன் அமர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டார். பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து, பெண்ணின் தந்தை, போக்குவரத்து செயலர் முத்தம்மாவிடம், பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.