புதுச்சேரி : ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டி, புதுச்சேரி பகுதியை சேர்ந்த 7 பேரிடம் ரூ. 1.51 கோடி பணம் அபேஸ் செய்த மோசடி கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி திருவண்டார் கோவிலை சேர்ந்தவர் கமல், 35; இவரிடம் ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்காலம் என, மர்ம நபர் தொலைபேசியில் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய கமல், அவரது வங்கி கணக்கில் பல்வேறு தவணையில்ரூ.56.50 லட்சத்தை செலுத் தினார்.அதேபோன்று, காரைக்கால் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுப்ரமணியனை தொடர்பு கொண்ட அந்த கும்பல், ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி, ரூ. 21.96 லட்சம் பணம் பெற்றது, சிலநாட்களுக்கு பிறகு அதே கும்பல் மீண்டும் சுப்ரமணியனை தொடர்பு கொண்டு, பங்கு சந்தையில் தங்களுக்கு ரூ. 4 கோடி லாபம் வந்துள்ளதாகவும், அதற்கு 5 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும் என கூறி, மேலும் ரூ. 21.18 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்தது.மேலும், புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரிடம், அதே பாணியில் பேசி ரூ. 21.87 லட்சத்தை, மோசடி கும்பல் பெற்றுள்ளது.அத்துடன், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த நல்ல நாகா சதீஷ் பாப்ஜி என்பரிடம் மும்பை போலீஸ் பேசுவதாக கூறி, அவருக்கு வந்த பார்சலில் போதை பொருட்கள் இருப்பதாகவும், வழக்கு போடாமல் இருக்க தாங்கள் கூறிய வங்கி கணக்கில் பணம் போட வேண்டும் என, ஏமாற்றி, ரூ. 19.94 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.தவளக்குப்பத்தை சேர்ந்த பூபாலன் என்வர், தனியார் மருத்துவமனை சேர்மன் பெயரில் வந்த மெயிலை நம்பி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 9.50 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.இப்படியாக நேற்று முன்தினம் மட்டும், பகுதி நேர வேலை, தவறாக வங்கி கணக்கில் பணம் செலுத்தி ஏமாந்தது என மொத்தம் 7 பேர் ரூ. 1.51 கோடி பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.இது தொடர்பான புகார்களின் மீது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.