| ADDED : டிச 06, 2025 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி உயர்மட்ட மேம்பால பணிகளுக்கு டெண்டர் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் துவக்கியுள்ளது. தொலைநோக்கு பார்வையோடு விடுப்பட்ட காமராஜர் சாலையிலும்,வழுதாவூர் சாலையிலும் இணைத்தே உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.877 கி.மீ., நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் ரூ.436 கோடியில் கட்டப்பட உள்ளது. மேலும் ரூ.25.05 கோடி மதிப்பில் 13.63 கி.மீ., தொலைவுக்கு கிழக்கு கடற்கரை சாலையும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கான பணிகளை கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துவக்கி வைத்தார். அப்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி - கடலுார் சாலையில் 650 கோடியில் மேம்பாலம், நான்குவழி சாலையை பணிகள் துவங்கப்படும் என, அறிவித்தார். மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தற்போது இதற்கான டெண்டர் பணிகள் துவங்கியுள்ளன. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சென்னை மண்டலம் வாயிலாக இந்த டெண்டரை விட்டுள்ளது. இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.877 கி.மீ., நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யவும், புதுச்சேரி - கடலுார் சாலையை 650 கோடியில் மேம்பாலம், நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிறுவனத்தினை தேர்வு செய்யவும் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்புதலுக்காக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். டெண்டர் பணிகள் துவங்கியுள்ளதால் இத்திட்டம் விரைவில் வேகமெடுக்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சிக்னல்களில் நெரிசலில் தினமும் விழிபிதுங்கி செல்லும் புதுச்சேரி மக்களுக்கு இது நிம்மதி அளித்தாலும், ராஜிவ் சிக்னலில் இரண்டு பிரதான மெயின் ரோடுகளை தவிர்த்துவிட்டு மேம்பாலங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா சிக்னலில் கிழக்கு - மேற்காக மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொலை நோக்கத்தோடு எடுக்கப்பட்ட வரவேற்க தக்க நல்ல முடிவு. விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் ஜவகரில் நகரில் மேம்பாலத்தில் ஏறினால் நேரடியாக புது பஸ்டாண்ட்டை நோக்கி சென்று விடலாம். அப்படி பார்த்தால், ராஜிவ் சிக்னலில் கிழக்கு-மேற்காக கோரிமேடு ரோடு, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலையில் மேம்பாலம் இணைத்து இறக்கும் திட்டத்தை தீட்டி இருக்க வேண்டும். ஆனால் மேம்பால திட்டத்தில் கோரிமேடு வழித்தடம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலில் தினமும் திணறிக்கொண்டு இருக்கும் காமராஜர் சாலையும், வழுதாவூர் சாலையும் விடுபட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு அத்திபூத்தாற்போல் பெரிய மேம்பால திட்டம் கிடைத்துள்ளது. இதில் அனைத்து போக்குவரத்து மிகுந்த நெரிசல் சாலைகளையும் மேம்பாலத்துடன் இணைத்தால் புதுச்சேரி எதிர்காலத்தில் சிக்கல் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் இருந்து தப்பிக்க முடியும். எனவே மேம்பால திட்டத்தில் விடுப்பட்ட காமராஜ் சாலையும், வாழுதாவூர் சாலையையும் இணைக்க மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் மாநில அரசே இரண்டு சாலைகளிலும் மேம்பாலத்தை கட்ட நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். ஏனெனில், இலவசத்தை காட்டிலும் இது போன்ற உட்கட்டமைப்பினை தான், புதுச்சேரி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.